w
Home » ஆசிரியர் பரிந்துரை » 2018-ல் முதலீட்டாளர் மாநாடு

2018-ல் முதலீட்டாளர் மாநாடு

சென்னை,  ஜூன் 3: அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு 2018-ம் ஆண்டில் மிகச்  சிறப்பாக தமிழக அரசு நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தொழில்கள் துவங்க ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 3-வது தென் மண்டல மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கூறியதாவது:-
2015-ம் ஆண்டில், செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில், உலகமே பாராட்டும் வகையில், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் மிகச்  சிறப்பாக நடத்தப்பட்டதை அனைவரும் அறிவோம்.  இந்த மாநாட்டினை செம்மையான முறையில் நடத்திட சிஐஐ ஆற்றிய அரும் பங்கினை நான் இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.
தொழில் துறையில் பல முக்கிய செயல் திட்டங்களை, தமிழ்நாடு அரசு தற்போது வகுத்து வருகிறது.  மாறி வரும் உலக பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, தமிழகத்தில் தொழில் தொடங்கிட, ஏற்கனவே உள்ள உகந்த சூழ்நிலையை மேலும் எளிமைபடுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களை ஒரே விண்ணப்பத்தின் மூலம்  ஆன்லைனில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.  அது மட்டுமன்றி, தேவைப்படின், இதற்கு ஏற்ற சட்டங்களும் இயற்றப்படும்.  தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சான்றாக, மத்திய அரசு தேசியப் பயனுறு பொருளாதார ஆய்வுக் குழு    வெளியிட்ட   மாநில முதலீட்டு உள்ளாற்றல் குறியீட்டு   அறிக்கையின்படி, நடுத்தர முதலீட்டு முடிவுகளில், அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டிற்கு வரும் புதிய தொழில் முதலீடுகள், துவங்கப்படும் புதிய நிறுவனங்கள் குறித்த ஒரு
சிறந்த அளவுகோல்  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு துறையினால் வழங்கப் பட்ட தொழில் துவங்குவதற்கான அனுமதி ஆகும்.  மே, 2011 முதல் மே, 2017 வரை இத்துறையினால் வழங்கப்பட்ட அனுமதி  15671 ஆகும்.  அது மட்டுமல்லாமல், 2011 முதல் 2017ம் ஆண்டு வரை, தமிழகத்தில் அளிக்கப்பட்ட புதிய உயர் அழுத்த மின் இணைப்புகள் 2472 ஆகும்.  மேற்கண்ட கால கட்டத்தில், தமிழகம் ஈர்த்த மொத்த அந்நிய நேரடி முதலீடு  1,25,970 கோடி ரூபாய் ஆகும்.

மே, 2011 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலத்தில், மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டு வளர்ச்சி விகிதம், 263 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2011 முதல் 2017 வரை தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதலீடு  3,07,457 கோடி ரூபாய்.  இது மட்டுமன்றி, மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து விசாகப்பட்டினம் – சென்னை – தூத்துக்குடி – கன்னியாகுமரி வரை ஒரு தொழிற் பெருவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேற்படி திட்டங்கள்  செயலாக்கத்திற்கு வரும்பொழுது தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மிகப்பெரிய பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது உறுதி.   உலக முதலீட்டாளர் மாநாட்டில், கையொப்பமிடப்பட்ட ரூ.2.42 இலட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ரூ.62,738 கோடி மதிப்பிலான 61 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இதன் மூலம் 76,777 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி திட்டங்கள் அனைத்தும் உன்னிப்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவைகள் விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.   கடந்த உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த உலக முதலீட்டாளர் மாநாட்டினை 2018-ம் ஆண்டில் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்தும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான கொள்கை அளவிலான மாற்றங்கள், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தொழில் துவங்கி நடத்தும் சூழ்நிலையை எளிமைபடுத்துதல், மனித வள மேம்பாட்டிற்கு மேலும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றினை இந்த  அரசு தொடர்ந்து செய்யும் என்றும்,
இந்த பணியினைச்  செயல்படுத்துவதற்கு, தொழில் முனைவோர் மற்றும் சிஐஐ போன்ற  தொழில் கூட்டமைப்புகளின் ஒத்துழைப்பினை நான் இத்தருணத்தில் கோருகிறேன்.
நாம் இணைந்து செயலாற்றும் பொழுது, நமது மாநிலம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வேகமாக பயணிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.  இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி  எம்.சி. சம்பத், சி.ஐ.ஐ. தென் மண்டல தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர்,  துணைத் தலைவர் தினேஷ், தமிழ்நாடு சி.ஐ.ஐ.-ன் தலைவர் ரவிச்சந்திரன்,  தென் மண்டலத்தின் மண்டல இயக்குநர் சதீஷ் ராமன் மற்றும் தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள்,  அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*