மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=43326
Export date: Wed Mar 20 8:59:25 2019 / +0000 GMT

பிஜேபியுடன் கூட்டணி கிடையாது:ஸ்டாலின்


சென்னை, ஜன.11:நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபியுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாஜ்பாய் கலாச்சாரத்தை பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி காட்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளது வியப்பாகவும்,
விசித்திரமாகவும் இருக்கிறது.

இந்த நான்கரை ஆண்டு காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த எந்த வகையிலும் உதவாத வெறுப்பு பேச்சுக்களை விதைத்து, சமூக நீதியை குழித் தோண்டி புதைக்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டு தமிழகத்தில் நலன் களை அடியோடு புறக்கணித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைத்து அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தையும் தலை சாய வைத்துள்ள பிரதமர் மோடி தன்னை வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. இது வழக்கம்போல
பிரச்சார உத்தியாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற ஒரே உன்னத நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கிய பிரதமர் வாஜ்பாயுடன் திமுக கூட்டணி வைத்தது.

ஆனால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் அல்ல, அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்ற ஆரோக்கிய மான கூட்டணியும் அல்ல.பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை போற்றிப் பாதுகாப்பதற்காக மோடி ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரும் அல்ல. முன்பு எந்த பிரதமரும் ஆட்சி செய்த போது இல்லாத அளவுக்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது மோடி ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பிரதமராக பொறுப்பு ஏற்று இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபியுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post date: 2019-01-11 08:44:51
Post date GMT: 2019-01-11 08:44:51

Post modified date: 2019-01-11 08:44:51
Post modified date GMT: 2019-01-11 08:44:51

Export date: Wed Mar 20 8:59:25 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com