Home » ஆசிரியர் பரிந்துரை » 12 எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தீவிரம்

12 எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தீவிரம்

சென்னை, ஜூன் 3: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் 12 ஜா கட்டர் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று காலை 7-வது மாடியில் மீண்டும் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் வணிக நிறுவனத்தின் பல மாடி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை பற்றிய தீ 38 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வியாழக்கிழமை மாலையிலேயே கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது கட்டிடத்தை தரை மட்டமாக இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  நேற்று காலையில் 6 ஹைட்ராலிக் ஜா கட்டர் மற்றும் 12 ஜா கட்டர் எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தொடங்கி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இடிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் சுமார் 300 போலீசாரும், 3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் 50 டன் கட்டிட கழிவுகளை கொட்டி மேடை அமைக்கப்பட்டு அதன் மேல் ஜா கட்டர் கருவி நிறுத்தப்பட்டது. இருப்பினும் 8 மாடிகளை கொண்ட கட்டிடம் மேலும் உயரமாக இருந்ததால் இடிக்கும் பணி சற்று நிறுத்தப்பட்டு மேடையின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டது.  தற்போது மேடையின் உயரம் 25 அடி உயரமாக அதிகரிக்கப்பட்டது. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின்  உயரம் 98 அடி ஆகும். கட்டிடத்தை முற்றுலுமாக இடிக்க 5 நாட்கள் வரை ஆகும் என்று இப்பணியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு மவுலிவாக்கம் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் ஒன்றும் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிப்பதில் ஈடுபட்டு வருகிறது. இடிக்கும் பணிக்கு மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடத்தை இடிக்கும் போது தூசிகள் பறப்பது கூட புகை மூட்டமாக இருக்கிறது. இதை தணிப்பதற்காக தொடர்ந்து தண்ணீர் பீச்சியடிக்கப்படுகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகாமையில் 100 மீட்டர் தொலைவிற்குள் அனைத்து கட்டிடங்களும், குடியிருப்புகளும் காலி செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் சிலவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குடியிருப்பு வாசிகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் கட்டிடத்தை ஓசையின்றி இடிப்பதற்கான தொழில்நுட்பம் மிகவும் கவனமுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*