Home » அரசியல் » கருணாநிதி 94-வது பிறந்தநாள் விழா

கருணாநிதி 94-வது பிறந்தநாள் விழா

சென்னை, ஜூன் 2: திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்ததின விழா மற்றும்  சட்டமன்ற பணியின் 60-ம் ஆண்டு நிறைவு வைர விழா நாளை  சென்னையில் நடை பெறுகிறது.
மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, நிதிஷ்குமார், லாலுபிரசாத், சரத்பவார், பரூக்அப்துல்லா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின்  பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி ஆகும். ஆண்டு தோறும் இந்த நாளில் அவர் அண்ணா, பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பிறகு அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்வார்.
இந்த முறை உடல்நலக் குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவில்லை. அவரது 94-வது பிறந்த தின விழா மற்றும் சட்டப்பேரவை பணி வைர விழா ஆகியவற்றை இணைத்து பிரமாண்டமான விழாவாக நடத்த திமுக ஏற்பாடு செய்துள்ளது.
1957-ல் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வென்ற அவர் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
60 ஆண்டு கால  சட்ட மன்ற பணியை வைரவிழாவாக திமுக கொண்டாடுகிறது. ஜூன் 1-ம் தேதியில் இருந்தே திமுக
சார்பில்  பல்வேறு   இடங்களில் கருணாநிதியின் பணிகளை பாராட்டி கவியரங்கம், வாழ்த்தரங்கம் போன்றவை நடைபெற்று வருகின்றன.  இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை ஒஎம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வரவேண்டும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகிறார்கள்.

பொதுக்கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன், திருணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ.பிரையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*