w
Home » சென்னை » மந்திரி விஜயபாஸ்கர் நாளை ஆஜராகிறார்

மந்திரி விஜயபாஸ்கர் நாளை ஆஜராகிறார்

சென்னை,டிச.17: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

குட்கா வழக்கில் 3வது நாளாக ஆஜராகி வரும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாளையும் சிபிஐ விசாரணை நடத்தினால், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விஜயபாஸ்கர் நாளை ஆஜராக வாய்ப்பில்லை என தெரிகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

நாளை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரும் ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தற்போது குட்கா விவகாரத்தில் சிபிஐயில் அமைச்சர் விஜயபாஸ்கர் 3-வது நாளாக ஆஜராகியுள்ளார். நாளையும் விசாரணை தொடரும் பட்சத்தில், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று வரும் 20-ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றுமாலை அப்பல்லோ மருத்துமனை இதயவியல் நிபுணர் விஜயசந்திர ரெட்டி, நாளை மறுநாள் எய்ம்ஸ் மருத்துவர்கள் நிக்கில் டேண்டன் (நாளமில்லா சுரப்பி நிபுணர்), தேவ கவுரவ் (இருதய நிபுணர்) ஆகியோர் ஆஜராகவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*