w
Home » Flash News » பெய்ட்டி புயலின் வேகம் அதிகரிப்பு

பெய்ட்டி புயலின் வேகம் அதிகரிப்பு

சென்னை,டிச.17:பெய்ட்டி புயலால் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் நேற்றும், இன்றும் வெறும் காற்று மட்டுமே வீசியது.

வலுவடைந்துள்ள பெய்ட்டி புயலின் வேகம் அதிகரித்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெய்ட்டி புயலாக மாறி வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் பலத்த மழை இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் நேற்று சென்னையில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக கடும் குளிர் நிலவியது. மிகக் குறைந்தபட்சமாக 21.1 டிகிரி வெப்பம் பதிவானது.

எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பழவேற்காட்டில், மீனவ மக்கள் மீட்கப்பட்டு, புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெய்ட்டி புயலின் எதிரொலியாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடல் சீற்றமாக காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில், கடல் பலத்த சீற்றத்துடன் உள்ளது.

இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையும் சூழல் ஏற்பட்டதால், கிரேன்கள், டிராக்டர்கள் மூலம், பாதுகாப்பான பகுதிகளுக்கு மீனவர்கள், தங்கள் படகுகளை கொண்டு சென்றனர்.

கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றுடன், சுமார் 2 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழுகின்றன. படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகும் சூழல் ஏற்பட்டதால், கோரைக்குப்பம் பகுதி மீனவ மக்கள் ஆண்டார்மடம் புயல் பாதுகாப்பு மையத்தில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காக்கிநாடாவுக்கு கிழக்கே 130 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 16 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்து ஆந்திராவை நோக்கி செல்கிறது. இன்று பிற்பகலில் காக்காநாடாவுக்கு வடக்கே பெய்ட்டி புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெய்ட்டி புயல் காரணமாக 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*