w
Home » Flash News » லோடு வேன் தீப்பிடித்து ஓட்டுநர் உயிரிழப்பு

லோடு வேன் தீப்பிடித்து ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னை, டிச.16:பூந்தமல்லி அருகே லோடு வேன் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான் சத்திரம் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நேற்றிரவு 10 மணியளவில் லோடு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் முன்பகுதியில் தீப்பிடித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீப்பிடித்து எரிந்த அந்த வேனின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் பார்த்தபோது அந்த வேனின் டிரைவர் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த அவர் யார் என்பது குறித்து நசரத் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். லோடு வேனின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது அந்த வேன் அயனாவரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு சொந்த மானது என்பது தெரியவந்தது. மேலும் அந்த வேனை ஓட்டேரி
செல்வபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிகேசவன் (வயது 24) என்பவர் 2 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நேற்றிரவு பூந்தமல்லி அருகே லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்து சாலையோரம் வேனை நிறுத்தி உள்ளார். அப்போது வேன் தீப்பிடித்ததாக தெரிய வந்துள்ளது.

வேன் தீப்பிடித்ததும் அதிலிருந்து அவர் தப்ப முயற்சி செய்யாததும், டிரைவர் இருக்கையில் இல்லாமல் அதற்கு எதிர்புறம் இருந்த இருக்கையின் அருகே இருந்த கதவை பாதி திறந்த நிலையில் இறந்து கிடந்தும் சந்தே கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

இது தவிர வேன் சாலையில் நேராக இல்லாமல், குறுக்காக திரும்பி நின்று எரிந்திருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது.வேன் தீப்பிடித்து எரிந்த காரணம் இதுவரை சரிவர தெரியாத நிலையில் வேன் தானாகவே தீப்பிடித்து எரிந்ததா? அல்லது யாரேனும் தீவைத்து எரித்தனரா என்ற கோணத்திலும் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*