w
Home » Flash News » மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்

மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில்

கொழும்பு, டிச.16:இலங்கையில் அதிபர் சிறிசேனா வால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை அக்டோபர் 26-ந் தேதி அதிபர் சிறிசேனா நீக்கியதை தொடர்ந்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. மேலும் நாடாளு மன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சர்கள் செயல்படவும் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த விவகாரத்தால் இலங்கை அரசியலில் கடந்த 51 நாட்களாக குழப்பம் நீடித்தது.நீதிமன்றங்களின் நடவடிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமை ஆகியவற்றால் அதிபர் சிறிசேனாவுக்கு அடிமேல் அடி விழுந்தது.

இந்த நிலையில் உள்நாட்டு குழப்பம் மற்றும் சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து சிறிசேனாவும், ரணில் விக்கிரமசிங்கேவும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க சிறிசேனா சம்மதித்தார்.

இதையடுத்து இன்று காலை அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரதமராக சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கை அரசியலில் 51 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிப்பதை விட ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறிவந்த அதிபர் சிறிசேனா இறுதியில் பணிந்துள்ளார்.ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தை நிலைநாட்ட உறுதுணையாக இருந்த இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் புதிய அமைச்சரவையை ரணில் விக்கிரமசிங்கே அமைப்பார் என்றும், 2019 பட்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*