w
Home » Flash News » ஸ்டெர்லைட் :சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்: நாளை அரசு ஆலோசனை

ஸ்டெர்லைட் :சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்: நாளை அரசு ஆலோசனை

சென்னை,டிச.16:ஸ்டெர்லைட் ஆலை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளநிலையில் முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அம்மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், ஆலையின் அனுமதியை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ரத்து செய்ய வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் மேகாலயா உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இந்த குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்தியது. இதை தொடர்ந்து அறிக் கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சரியாக செயல்படாத காரணத்தினால் தான் ஆலை மீண்டும் திறக்க வழிவகை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், திருநாவுக்கரசர், வைகோ உள்பட பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நிருபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து அந்த ஆலையின் உரிமையாளர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாளை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அடுத்த மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நாளை அல்லது நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*