w
Home » ஆசிரியர் பரிந்துரை » ம.பி., ராஜஸ்தானில் இழுபறி

ம.பி., ராஜஸ்தானில் இழுபறி

புதுடெல்லி, டிச.11: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் இடையே இழுபறி நிலை நிலவுகிறது.
சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி மிசோரமில் ஆட்சியை இழந்துள்ளது.
தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மத்தியப் பிரதேசம், மிசோரம் அகிய மாநிலங்களில் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.  ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 7-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 7 மணிக்கே அந்தந்த மாநிலங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணிக்கை நடைபெற்றது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பிஜேபிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மத்தியப் பிரதேசத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றன.

அந்த மாநிலத்தில் மற்ற கட்சிகள் வெல்லும் இடங்கள் ஆட்சி அமைப்பது யாரென்பதை உறுதி செய்யும் நிலை உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தாலும் பெரும்பான்மைக்கு குறைவாகவே அக்கட்சிக்கு இடம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 90 இடங்களில் அக்கட்சி ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருந்தது.

அதே சமயம் மிசோரம் மாநிலத்தில் இதுவரை தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தின் மிசோ தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதலமைச்சர் லால் தங்க்வாலா தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவும் நிலையில் இருந்தார். தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை வென்ற இடங்களை விட அதிக இடங்களில் அக்கட்சி முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் சில இடங்களை கைப்பற்றி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*