w
Home » இன்று... » இந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்

இந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்

 

அடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடைசி வரை போராடிய ஆஸ்திரேலிய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இரண்டு இன்னிங்சிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கு கடினமானது என்றாலும், ஆஸ்திரேலிய அணி எளிதில் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை போராடியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி, கடைசி நாளான இன்று தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கேப்டன் டிம் பெய்னுக்கு பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பக்க பலமாக நின்றார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

டிம் பெய்ன் ஒருவாறாக அவுட்டாக, அந்த இடத்திற்கு வந்த நாதன் லையன் கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடினார். அவர் 291 ரன் வரை ஸ்கோரை கொண்டு வந்து கடைசிவரை 38 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய தரப்பில் அஷ்வின், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை சாய்த்தார்.
முதல் இன்னிங்சில் சதம் அடித்ததுடன் 2-வது இன்னிங்சில் 71 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்ட புஜாரா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

ஸ்கோர்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் -250 ரன்கள்

2-வது இன்னிங்ஸ் – 307 ரன்கள்

ஆஸி. முதல் இன்னிங்ஸ் – 235 ரன்கள்

2-வது இன்னிங்ஸ் – 291 ரன்கள்

31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2008-ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியை வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருப்பதும் இதுவே முதல்முறை.
நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என தற்போது முன்னிலையில் உள்ளது.

கடைசி வரை டென்ஷன்

கேப்டன் விராத் கோலி, 4 பந்து வீச்சாளர்களுடன் விளையாடி இந்த வெற்றியை பெற்றிருப்பது சாதனை என்று கூறியுள்ளார். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் வால்பகுதி ஆட்டக்காரர்கள் ஆடிய விதம் எங்களுக்கு டென்ஷனை ஏற்படுத்தியது. அந்த டென்ஷன் கடைசி வரை நீடித்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தகுதியான வெற்றி

ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது என்று கூறியுள்ளார். புஜாராவின் ஆட்டத்தை பாராட்டியுள்ள டிம் பெய்ன், அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும், பேட்ஸ் மேன்கள் சரியாக விளையாடததால் தோல்வி ஏற்பட்டது என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*