Home » ஆசிரியர் பரிந்துரை » யானை தாக்கி 4 பேர் பலி

யானை தாக்கி 4 பேர் பலி

சென்னை/கோவை, ஜூன் 2: கோவை போத்தனூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகளைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமாரை யும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்த யானையைக் காண மக்கள் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனி சாமி என்பவரை யானை திடீரென தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச் சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன் தினம் கோவைப்புதூர் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் வெளியில் வந்த இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மதுக்கரை குறும்பப்பாளையத்தில் இந்த யானை கடை ஒன்றையும் உடைத்து சேதப்படுத்தியதாகவும் இரண்டு நாட்களாக இந்த யானை இப்பகுதியில் அதிக ஆக்ரோஷத்தோடு சுற்றி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து வெள்ளலூர் பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் இரங்கல் – நிதியுதவி யானை தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம்,  மதுக்கரை வட்டம், குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் இன்று அதிகாலை, காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் காயத்திரி,  வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ப
வரின் மனைவி நாகரத்தினம், மாரியப்பன்  என்பவரின்  மனைவி ஜோதிமணி மற்றும் குப்பண்ண கோனார் என்பவரின் மகன் பழனிசாமி ஆகிய நான்கு நபர்களை தாக்கி, அதனால் அவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து  மிகவும் துயரம் அடைந்தேன்.
காட்டு யானை  தாக்கியதில் அகால மரணமடைந்த  காயத்திரி, நாகரத்தினம், ஜோதிமணி மற்றும் பழனிசாமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்டு யானை தாக்கியதில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிசிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100/-ரூபாயும் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*