w
Home » Flash News » மாயமான பவர் ஸ்டார் சென்னை திரும்பினார்

மாயமான பவர் ஸ்டார் சென்னை திரும்பினார்

சென்னை, டிச.9: மாயமானதாக போலீசில் புகார் கூறப்பட்ட பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினார். அவர் விசாரணைக்காக அண்ணாநர் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது:சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 6 ம் தேதி இவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நண்பரை பார்க்க அவரது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தனது கணவர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்றும், மர்ம நபர்கள் சிலர் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பவர் ஸ்டார் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டுவதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் உதவிகமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பவர் ஸ்டார் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவருடன் தொடர்பு கொண்டு போலீசார் பேசியபோது, பணப்பிரச்சனை தொடர்பாக சொத்தை விற்க ஊட்டிக்கு வந்ததாகவும், தன்னுடைய மனைவியும் தற்போது ஊட்டிக்கு வந்துள்ளதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பவர் ஸ்டாரை காணவில்லை என்று புகார் கொடுத்த அவரது மனைவி அவர் ஊட்டியில் இருப்பது தெரிந்தவுடன் அங்கு புறப்பட்டு சென்றுவிட்டார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதை அவரது மனைவி மறுத்துள்ள நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னைக்கு திரும்பியுள்ளார். அவர் விசாரணைக்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*