Home » முக்கிய செய்தி » இந்தியா அபார பந்துவீச்சு: ஆஸி. திணறல்

இந்தியா அபார பந்துவீச்சு: ஆஸி. திணறல்

அடிலெய்டு, டிச. 7: அடிலெய்டில் நடந்துவரும் இன்றைய (2-ம் நாள்) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலிய அணி திணறியது. 88 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 191 ரன்கள் எடுத்தது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் பொறுப்பான சதத்தால் 250 ரன்களை குவித்தது. இதையடுத்து இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஃபின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாகி டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், மார்கஸ் ஹாரிஸுடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி முடிந்தவரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட முயன்றது. ஆனால், அஷ்வின் அந்த ஜோடியை பிரித்தார். மார்க்ஸ் ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றிய அஷ்வின், ஷான் மார்ஷை 2 ரன்னில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து உஸ்மானுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி சேர்ந்தார். மிகவும் நிதானமாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்புடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றார். 124 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்ட கவாஜாவை, அஷ்வின் தனது சுழலில் வீழ்த்தினார். இதனால், 100 ரன்களுக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு முனையில் மளமளவென விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் டிராவிஸ் ஹெட் (61) மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட்(61), ஸ்டார்க் (8) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இஷாந்த் பந்தில் பின்ச் டக்-அவுட்:

இன்றைய போட்டியில், இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். மூன்றாவது பந்தை இஷாந்த் வீசிய போது ஆரோன் பின்ச் கீழே இறங்கி வந்து பந்தை அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து லேசாக ஸ்விங் அகவே இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. அப்போது ஒரு ஸ்டம்ப் தவிர, மீதி இரண்டு ஸ்டம்ப்கள் பறந்து போய் கீழே விழுந்தன. ஸ்டம்ப்கள் எகிறியது, இந்திய ரசிகர்களுக்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

3 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வினும் அசத்தல்:

அடுத்து களமிறங்கிய வீரர்கள் மார்க்கஸ் ஹரிஸ், முக்கிய ஆட்டக்காரர் கவாஜா, மார்ஷ் ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளை அஸ்வின் தனது சுழல் பந்தால் சுழட்டிஎடுத்து அவுட்டாக்கினார். இஷாந்த் (2), அஸ்வின் (3), பும்ரா (2) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*