Home » Flash News » ‘நியூஸ்டுடே’ நாளிதழுக்கு ஸ்டாலின் வாழ்த்து

‘நியூஸ்டுடே’ நாளிதழுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, டிச.7:36 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘நியூஸ்டுடே’ நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூஸ் டுடே ஆசிரியர் டி.ஆர்.ஜவகருக்கு அவர் அனுப்பியுள்ள வா வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நல்ல இந்திய பத்திரிகை வரலாற்றில் 36 வருடங்களை நிறைவு செய்து, வெற்றிகரமாக 37-வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் ‘நியூஸ் டுடே’ பத்திரிகைக்கு திமுக சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையின் நம்பர்-1 மாலை நேர ஆங்கில பத்திரிகையாக இன்று வாசர்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த பத்திரிகையை தலைவர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரும், பத்திரிகை உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான திரு.டி.ஆர்.ராமசாமி துவக்கினார் என்பதும், இன்றைக்கு அந்த மாலை நேர ஆங்கில பத்திரிகை ஆல் போல் தழைத்து வளர்ந்து நிற்கிறது என்பதும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பத்திரிகை சுதந்திரத்தை உறுதியுடன் நிலைநாட்டி, பேணிக் காத்திடும் பாதையில் துளியும் அச்சமின்றி அசாத்திய துணிச்சலுடன் பீடு நடைபோடும் இந்த பத்திரிகை செய்திகளை நேர்மையாகவும், முந்தித் தருவதிலும் வாசகர்கள் மத்தியில் தனி முத்திரை பதித்து இருக்கிறது. மாலை நேரத்துப் பூங்காவாக சென்னை வாசிகளுக்கு கிடைத்திருக்கும் இந்த ஆங்கில பத்திரிகை செய்தி நிழல் தரும் வகையில் வெளி வந்துகொண்டிருக்கிறது.

பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை என்ற சூழ்நிலையில், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான, அறிவியல் பூர்வமான செய்திகளை நம்பகத்தன்மையுடன் உடனுக்குடன் வெளியிட்டு சென்னை மக்களின் இதயத்தில் உன்னதமான இடத்தை இந்த பத்திரிகை பிடித்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.

செய்திகளின் ‘டிக்ஷனரியாக’ திகழும் நியூஸ் டுடே ஆங்கில மாலை நேர பத்திரிகை இன்னும் நூறாண்டு மட்டுமல்ல, அதற்கு மேலும் பல்லாண்டுகள் இதே புகழுடன் வாசகர்களின்
நெஞ்சத்தில் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்று வாழ்த்தி, பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி வரும் ஆசிரியர் அன்புக்குரிய டி.ஆர்.ஜவகர் அவர்களுக்கும், நிருபர்கள் மற்றும் பத்திரிகை ஊழியர்களுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*