மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=40935
Export date: Wed Feb 20 7:12:35 2019 / +0000 GMT

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்


சென்னை, டிச.6:குட்கா லஞ்ச வழக்கில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

செங்குன்றம் குட்கா குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 2016 ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர், சுகாதார துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பல லட்சரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன.

அந்த டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உட்பட மேலும் சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இதை கைபற்றிய வருமான வரி துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இது குறித்து விசாரணை தொடங்கிய சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன்,

இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் குட்கா லஞ்ச வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இருவருக்கும் இன்று சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அமைச்சரின் உதவியாளர் சரவணன், நாளை காலை 10 மணிக்கு சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் தற்போது சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது.
Post date: 2018-12-06 10:54:41
Post date GMT: 2018-12-06 10:54:41

Post modified date: 2018-12-06 10:54:41
Post modified date GMT: 2018-12-06 10:54:41

Export date: Wed Feb 20 7:12:35 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com