மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=40918
Export date: Wed Feb 20 6:58:15 2019 / +0000 GMT

டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ சோதனை ஓட்டம்


சென்னை, டிச.6:சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் முக்கிய கட்டமாக வண்ணாரப்பேட்டை முதல் தேனாம் பேட்டை டிஎம்எஸ் வரையிலான சுரங்க வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதை அமைச்சர் எம்.சி.சம்பத் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.ஜனவரி மாதத்தில் இந்த வழித் தடத்தில் போக்குவரத்து தொடங்க உள்ளது.முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் இறுதிப்பணியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரை 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் கடந்த வாரம் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை முழு அளவில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதனை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் ஆகியோர் பார்வையிட்டு வழித்தடத்தை ஆய்வு செய்தனர். இங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த வழித்தடத்தில் ஜனவரி மாத இறுதியில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மெட்ரோ ரெயில் முதல் திட்டம் முழு அளவில் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து முதல் திட்டத்தின் விரிவாக்கமாக வண்ணா ரப்பேட்டையில் இருந்து திருவொற்றி யூர் விம்கோ நகர் வரையிலான பணிகள் தீவிரமடையும்.

இந்த வழித்தடத்தில் 2020 மார்ச்சில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழித்தடத் தில் கொருக்குப்பேட்டை, தியாகராயா கல்லூரி, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கௌரி ஆசிரமம், விம்கோ நகர் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 2019 டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏஜிடிஎம்எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரை மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் டிசம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ முதல் திட்டப்பணி 2009 ஜூன் மாதம் தொடங்கியது. முதல் கட்ட போக்குவரத்து 2015-ல் ஆரம்பித்தது. தற்போது விமான நிலையம் முதல் சென்ட்ரல் வழியாக கோயம்பேடு வரையிலும் மற்றும் விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையிலும் இரு வழித்தடங்களில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரை சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால் சின்னமலை முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையிலான போக்குவரத்து காலை 6 மணி முதல் 8 மணி வரை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகளை வேன்கள் மூலம் அழைத்து செல்ல மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Post date: 2018-12-06 10:23:56
Post date GMT: 2018-12-06 10:23:56

Post modified date: 2018-12-06 10:23:56
Post modified date GMT: 2018-12-06 10:23:56

Export date: Wed Feb 20 6:58:15 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com