Home » Flash News » புஜாராவின் சதத்தால் மீண்டது இந்தியா

புஜாராவின் சதத்தால் மீண்டது இந்தியா

அடிலெய்ட், டிச.6: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தொடக்கத்தில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறிய இந்திய அணியை, புஜாரா சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தன் அணி டாப் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் அவர் உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பியதால், ரன் குவிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. ராகுல் 2 ரன்களுக்கும், முரளி விஜய் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து புஜாரா – கோலி இணைந்து அணியை மீட்பார்கள் என நினைத்த போது, கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ரஹானே 13 ரன்களுக்கு வெளியேற, 41 ரன்களுக்கே 4 விக்கெட்களை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறியது.

பின்னர், ரோஹித் சர்மா – புஜாரா ஆகியோர் ஓரளவு கூட்டணி அமைத்து நிலையாக ஆடிவந்த நிலையில், ரோஹித் 37 ரன்களில் அவுட் ஆக, அடுத்துவந்த ரிஷப் பண்ட்டும் 25 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

ஆக, மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. புஜாரா (62) மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தும், மறுமுனையில் அஸ்வினும் (15) விளையாடினர்.
மறுமுனையில், அஸ்வின் (25), இஷாந்த் ஷர்மா (4) என விக்கெட்டுகள் சரிந்தாலும், புஜாரா மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 236 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து சதம் கடந்தார். இவரின் சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு, அணியின் ஸ்கோர் விறுவிறு என
உயர்ந்தது.

அதன்படி, 87 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்தது. புஜாரா 117 ரன்களுடனும், ஷமி 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
புஜாரா 123 ரன்களில் இருந்தபோது, ரன் அவுட் ஆகி வெளியேறினார். முகமது ஷமி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி, 87.5 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*