மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=40887
Export date: Mon Dec 10 16:12:32 2018 / +0000 GMT

3 எம்எல்ஏ நியமனம் செல்லும்


புதுடெல்லி, டிச.6:புதுச்சேரியில் 3 பிஜேபி எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

புதுச்சேரியில் பிஜேபியைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது.

நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து அந்த 3 பேருக்கும் கவர்னர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அவர்கள் 3 பேரையும் சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் தடை விதித்து இருந்தார். இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி வழங்கியது.

அதில், ‘யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை கவர்னருக்கு நியமன எம்எல்ஏக்களை தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது. நியமன எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை.

எனவே, இந்த நியமனத்துக்கு எதிராக ஜனாதிபதியிடம்தான் முறையிட வேண்டும். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும், முதல்வரின் பார்லிமென்ட்டரி செயலருமான லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், புதுச்சேரியில் பிஜேபியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் நியமனம்
செல்லும் என்றும் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தலையிட புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு முதலமைச்சர் நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Post date: 2018-12-06 09:19:42
Post date GMT: 2018-12-06 09:19:42

Post modified date: 2018-12-06 09:19:42
Post modified date GMT: 2018-12-06 09:19:42

Export date: Mon Dec 10 16:12:32 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com