Home » Flash News » மேகதாது : நாளை சிறப்பு தீர்மானம்

மேகதாது : நாளை சிறப்பு தீர்மானம்

சென்னை, டிச.5:மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி நாளை தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுகிறது.

அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சி களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இப்பிரச்சனை தொடர்பாக 4-ந் தேதி திருச்சியில் திமுக தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மேலாண்மை வாரியக் கூட்டத்திலும் தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முதலமைச்சரை சந்தித்து மேகதாது அணை பிரச்சனையில் தமிழக சட்டசபை கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு சட்டசபையின் சிறப்புக் கூட் டத்தை கூட்டியிருக்கிறது. நாளை பிற்பகலில் இந்த சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை ராஜ்பவனி லிருந்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு பிறப்பித்தார். டிசம்பர் 6-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடக்க இருப்ப தாக பேரவை செயலாளரும் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மேகதாது அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து பேசுவார். அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் பதிலளித்து பேசுவார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அர
சுக்கும், கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாது அருகே அணை கட்ட அனுமதி வழங்கியது சரியல்ல, இது காவிரி மேலாண்மை வாரியத்தின் விதிகளுக்கும் முரணாகும்.
தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டாலின் வரவேற்பு

இயற்கை பேரிடர் ஒரு புறம் இருக்க, செயற்கை பேரிடராக மேகதாது அணையை கட்ட முயற்சி செய்கிறார்கள். இந்த விஷயத்தில் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற இருப்பது வரவேற்க தக்கது. அரசின் நிலையை பொறுத்து எங்கள் கருத்துக்களை முன் வைப்போம் என்று ஸ்டாலின் கூறி
இருக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*