Home » தலையங்கம் » அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டி தண்ணீரை தேக்கி பாசனப்பரப்பை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய
அரசின் நீர்வளத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.5-,912 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒப்புதல் மேகதாது அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியாகும்.

தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கையை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வெறும் வரைவு அறிக்கைதான் என்று மத்திய அரசின் சார்பில் சமாதானம் கூறப்பட்டாலும் அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டால் தமிழகத்துக்கு இப்போது கிடைக்கும் உபரி நீரும் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாலைவனமாக மாறிவிடும்.
அண்மையில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வரைவு அறிக்கைக்கு அனுமதி அளித்ததை கடுமையாக எதிர்த்துள்ளது. ஆனால், அதற்கு அந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை.

இந்த விஷயத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டித்துள்ளன. தமிழகத்தின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்ற மாநில அரசின் செயல்பாட்டை இந்த விஷயத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தின் நெருக்கடியை நினைத்துப்பார்த்து கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக மாநிலங்களுக்கிடையே நல்லுறவு தொடர மத்திய அரசு நியாயமாகவும், நடுநிலையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஒருதரப்பு ஆதரவாக செயல்படுவது சரியானது அல்ல.

மத்திய அரசும் இந்த பிரச்சனையில் விவேகத்துடன் செயல்பட்டு வரைவு அறிக்கைக்கு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*