Home » தலையங்கம் » விவசாயிகள் பிரச்சனை

விவசாயிகள் பிரச்சனை

நாடு முழுவதும் தற்போது விவசாயிகள் பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது. தாராளமய சூழலில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

விவசாயி விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயமே ஒரு நஷ்டத் தொழிலாக மாறியுள்ளது. விவசாயிக்கு தனது பொருளுக்கு விலை கிடைக்கவில்லையே தவிர அதே பொருட்கள் சந்தைக்கு வரும்போது மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்கு இடைத்தரகர்களே காரணமாகும்.

மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து பொருட்களை பெற்று பல மடங்கு லாபம் வைத்து சந்தையில் விற்று இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடைகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது

விவசாயியும், நுகர்வோரும்தான். இதற்கு முடிவு கட்ட அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதைச் சரியாக செயல்படுத்தாததால் மீண்டும் மீண்டும் விவசாயமே பாதிக்கப்படுகிறது.

இடு பொருட்களின் விலையும் அதிகரித்து, இயற்கை பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை அடுத்த சில ஆண்டுகளால் இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு தங்களது விவசாயக் கடன்களை முதலில் ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, மத்திய அரசு ஒரு முறை ரூ.70,000 கோடி அளவுக்கு விவசாய கடன்களை ரத்து செய்துள்ளது. அந்த முன்னுதாரணத்தை பின்பற்றி கடன்களை ஓரளவுக்கு ரத்து செய்யலாம். பயிர்க்காப்பீடு குறித்த புகார்களை சரி செய்து அவற்றை முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இடுபொருட்களின் விலைகளை குறைத்து, விவசாயத்தை லாபகரமான முறையில் நடத்த மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அரசு கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அதற்கேற்ப அவர்களது பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பிரச்சனைகள் என்னவென்று அறிந்து அவற்றிற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முற்படவேண்டும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*