Home » தலையங்கம் » இஸ்ரோவின் இன்னொரு சாதனை

இஸ்ரோவின் இன்னொரு சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ மேலை நாடுகளுக்கு இணையாக பல புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் நேற்று 31 செயற்கைகோள்களை எடுத்துச் சென்று அவற்றை அதனதன் சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. இதில், இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைகோளும் ஒன்றாகும். மற்றவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற பிற நாடுகளின் செயற்கைகோள்களாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. சரியான நேர அளவில் செயற்கைகோள்களை துல்லியமாக ராக்கெட் நிலைநிறுத்தியது. ஹைசிஸ் செயற்கைகோள் புவி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாகும். மிக துல்லியமான படங்களை எடுக்கும் வகையில் சக்தி வாய்ந்த கேமிராக்கள் அந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன.

வனப்பகுதி, வேளாண்மை, ராணுவப் பகுதிக்காக இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படும். பூமியை கண்காணிக்கும் வகையில் இது 5 ஆண்டுகளுக்கு செயல்படும். இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுக்குள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்து இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மற்றொரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்ற தகவலையும், ஜனவரி மாதத்தில் சந்திராயன்-2வையும் செலுத்த இருக்கும் விவரத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் வளர்ச்சி அடைந்த முக்கிய நாடுகளின் வளர்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பல செயற்கைகோள்களை விண்ணில் இஸ்ரோ செலுத்தி உள்ளது. நம்பகத்தன்மை வாய்ந்த ஏவும் தன்மையை இந்தியா பெற்றுள்ளதால் உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டு செயற்கைகோள்களை அனுப்ப வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*