Home » தலையங்கம் » சட்டசபை கலைக்கப்பட்டதில் சர்ச்சை

சட்டசபை கலைக்கப்பட்டதில் சர்ச்சை

ஜம்முகாஷ்மீர் மாநில சட்டசபை கவர்னர் சத்பால் மாலிக்கால் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. அங்கு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும் சட்டசபை முடக்கியே வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், எதிரெதிர் துருவங்களாக இருந்த தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

இந்த கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்த நிலையில் உடனடியாக கவர்னர் சத்யபால் மாலிக் சட்டசபையை கலைத்து இருக்கிறார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குதிரை பேரம் நடப்பதாக புகார்கள் வந்ததால் அதை தடுக்க தாம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கவர்னர் கூறியிருக்கிறார். ஆனால், அவரது நிலைப்பாட்டில் அரசியல் உள்ளதே தவிர நடுநிலையான நோக்கம் தென்படவில்லை.

ஒரு மாநில சட்டசபை கலைக்கப்படுவதற்கு அடிப்படையான முகாந்திரம் இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பாகும். இது கவர்னர்
சத்யபால் மாலிக்குக்கு தெரியாதது அல்ல.

முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் கட்சியை உடைத்து பிஜேபி உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் ரகசியமாக நடைபெற்று வந்ததை அனைவரும் அறிவர். இந்த நிலையில் காங்கிரசுடன் சேர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆட்சி அமைப்பதை தடுக்கவே சட்டசபை கலைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கவர்னர் மாளிகையின் பேக்ஸ் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறப்படுவதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்தர்ப்பவாத அரசியலை தடுப்பதற்காக கவர்னர் எடுத்த முடிவு சரியானதே என்று பிஜேபி கூறுகிறது. அப்படியானால், முப்தி கட்சியுடன் பிஜேபி ஆட்சி அமைத்ததும் சந்தர்ப்பவாதம் தானே என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. அங்கு சட்டசபை கலைக்கப்பட்டதுடன் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று அக்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை இல்லாத நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி நடத்த கட்சிகளுக்கு கவர்னர் வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து சட்டசபையை கலைத்து சர்ச்சைக்கு இடமாகிவிட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*