Home » அரசியல் » ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

சென்னை, ஜூலை 11: தமிழகத்தில் ஜிகா வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் பிரகாஷ், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தமிழகத்தின் கேரள எல்லைப்பகுதியில் பரவி வரும் ஜிகா வைரஸ் குறித்த மர்ம காய்ச்சல்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் பன்றி காய்ச்சல், ஜிகா வைரஸ், சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் கடைக்கோடி குக்கிராமத்தில் கூட இத்தகைய வைரஸ் காய்ச்சல்கள் ஏற்பட்டால் அதனை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்து பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர் பிரகாஷ் கூறியபடி குக்கிராமமான அஞ்செட்டியில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவருடைய ரத்தம், சிறுநீர் உள்ளிட் டவைகளை பரிசோதித்து ஜிகா வைரஸ் அவரை தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளித்து அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். ஜிகா வைரஸ் உயிர்கொல்லி நோயல்ல. எனவே அது குறித்து பொது மக்கள் பீதிஅடைய தேவையில்லை.
ஏற்கனவே நான் பலமுறை குறிப்பிட்டது போல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய சிகிச்சையும், தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் அஞ்செட்டியை சுற்றியுள்ள 5 கி.மீ. பரப்பளவுள்ள கிராமங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் 12 மருத்துவ மாவட்டங்களில் கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது ஏற்கனவே 60 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து அறிந்து அப்போதிருந்தே நமது கிங் ஸ்டிடியூட் உள்பட ஆய்வகங்களில் நோய் கிருமிகள் பாதிப்பு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே இது குறித்து பொது மக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை. அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*