w
Home » விளையாட்டு » இங்கிலாந்து கேப்டனை பாராட்டிய ரோஹித்

இங்கிலாந்து கேப்டனை பாராட்டிய ரோஹித்

பல்லகலே, நவ.19: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் பெருந்தன்மையான செயலைப் பாராட்டி, இந்திய வீரர் ரோஹித் சர்மா ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளிடையே நடந்துவரும் டெஸ்ட் போட்டிகளை நேரில் காண்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள், பல மாதங்களுக்கு முன்பே மைதானத்துக்கு அருகே இருக்கும் இயர்ல்ஸ் ரெஜென்சி ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்து, பணமும் செலுத்தி இருந்தனர்.

ஆனால், போட்டி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், இருநாட்டு வீரர்கள் தங்குவதற்காக இந்த அறைகள் அனைத்தையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் புக் செய்தது. இதன்காரணமாக, ஏற்கெனவே முன்பதிவு செய்து, பணமும் செலுத்தி இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட்டு, மற்றொரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்தச் செயல் இங்கிலாந்து ரசிகர்களை வெகுவாகப் பாதித்தது. இது குறித்து தெரியவந்தும், ஒன்றும் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாதிக்கப்பட்ட அத்துனை ரசிகர்களையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, தான் எழுதிய மன்னிப்பு கடிதத்தையும் அளித்தார். தங்களால் ஏற்பட்ட அசவுகரியக் குறைவுக்கு மன்னிக்கவும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜோட் ரூட்டின் இந்தச் செயலைப் பார்த்து அந்நாட்டு ரசிகர்கள் உள்ளம் குளிர்ந்து, வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த நிலையில், இந்திய வீரர் ரோஹித் சர்மாவும், ஜோ ரூட்டின் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டு, உங்களின் சிறப்பான செயலைப் பாராட்டுகிறேன் என்று ட்விட்டியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*