w
Home » சினிமா » காற்றின் மொழி – விமர்சனம்

காற்றின் மொழி – விமர்சனம்

அடுப்பங்கரையில் தன்னுடைய ஆசைகளையும், எண்ணங்களையும் மனதில் போட்டு புகைந்து கொண்டு இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த காற்றின்மொழி படத்தை சமர்ப்பனம் செய்துள்ளார் இயக்குனர் ராதாமோகன். என்னால் முடியும் என்ற தாரக மந்திரத்தை கிடைக்கும் இடத்தில் எல்லாம் சொன்னால் வெற்றி உங்கள் வீடு தேடி வரும் என்ற எண்ணத்தை விதைக்கிறது இந்த காற்றின் மொழி.

நடுத்தர குடும்பத்தலைவியான ஜோதிகா, வீடு, வேலை என இருக்கும் கணவர் விதார்த் அவர்களுடைய ஒரே மகன் என்று அவர்களின் குடும்பம் சந்தோஷமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தனக்குள் எவ்வளவு ஆசைகள் இருந்தாலும் அதையெல்லாம் மனதிற்குள் புதைத்துக்கொண்டு குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கின்ற ஜோதிகாவிற்கு ரேடியோ ஸ்டேஷன் நடத்தும் போட்டியில் பங்கேற்கிறார்.

அதில் வெற்றி பெற்று பரிசு வாங்குவதற்காக செல்லும் ஜோதிகாவிற்கு ஆர்.ஜே.ஆக வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. ரேடியோ நிறுவன நிர்வாகியான லட்சுமி மஞ்சுவிடம் என்னால் முடியும் என்ற ஸ்லோகத்தை பயன்படுத்தி வாய்ப்பை பெறுகிறார்.

நேயர்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இரவில் ஒளிபரப்பாகிறது. ஹலோ என்று ஹஸ்கி வாய்சில் நேயர்களை தன் பக்கம் இழுக்கிறார். நிகழ்ச்சி தொடங்கிய ஒரு மாதத்திலேயே பேரும் புகழும் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஜோதிகா தொகுத்து வழங்குவதை கணவர் விதார்த்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் விதார்த் வேலை செய்யும் இடத்தில் முதலாளியின் மகனால் நெருக்கடி ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஜோதிகாவின் மகன், கணவரின் செல்போனை திருடி பிளேஸ் ஸ்டேஷன் வாங்க நினைக்கிறான். இதனால் பள்ளியில் இருந்து புகார் வருகிறது. அதனை தொடர்ந்து விதார்த் அடித்து கடுமையாக கண்டிக்கிறார். இதனால் வீட்டை விட்டு மகன் ஓடிவிடுகிறான். இந்த பிரச்சனையை தொடர்ந்து தன் மனத்திற்கு பிடித்த ஆர்.ஜே.வேலையை ஜோதிகா விடுகிறார். ஓடிப்போன மகன் கிடைத்தானா? வேலையை விடும் ஜோதிகா என்ன ஆனார்? கணவர் விதார்த் வேலை செய்யும் இடத்தில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் குடும்பத்தலைவியாக உள்ள ஜோதிகாவிற்கு ஏற்ற கேரக்டர். தனி ஒரு மனிஷியாக நின்று படம் முழுவதும் தாங்கி பிடிக்கிறார். ஒவ்வொரு காட்சிகளுக்கும் அவர் காட்டும் முக பாவங்கள் ஒரு முதிர்ச்சியான நடிகை என்பதை நினைவுப்படுத்துகிறது. ஆர்.ஜே.வாகி மதுவுடன் பேசலாம் என்ற நிகழ்ச்சியில் ஹலோ என்று அவர் சொல்லும் போது நமக்கே அவருடன் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.

ஜோதிகாவிற்கு ஏற்ற ஜோடியாக விதார்த்த உள்ளார். நடுத்தர குடும்ப தலைவனாக தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தனக்கு என்ன வேலை இருக்கப்போகிறது என்று எண்ணாமல் அவருடன் போட்டி போட்டு நடித்துள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதையை அமைத்து எந்த இடத்திலும் கதை தொய்வடையாமல் விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் ராதாமோகன். படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப காமெடியும் கைகொடுத்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்தந்த பிரேமிக்குள் கச்சிதமாக பொருந்தி உள்ளது. அவர்களை தேர்வு செய்ததற்காகவே இயக்குனருக்கு தனியாக ஒரு சபாஷ் சொல்லலாம்.

மொழி, அபியும் நானும், படங்களை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகனுக்கு இந்த படமும் மணிமகுடமாக அமைந்துள்ளது. சுரேஷ்திருவேதி கதைக்கு பொன்.பார்த்திபனின் வசனங்கள் வலுசேர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச் காஷிப் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. பின்னணி இசையில் அசத்தி உள்ளார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் அத்தனை கதாபாத்திரங்களும் திரையில் ஜோலிக்கின்றனர்.

அதிலும் ஜோதிகா டாப் டக்கர். அதேபோல் ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் வழக்கம் போல் கலக்கி உள்ளனர். படத்தில் இடம் பெற்றுள்ள மயில்சாமி, மனோபாலா, உமாபத்மநாபன், மோகன்ராம் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

மொத்தத்தில் காற்றின்மொழி – ரம்யமானது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*