w
Home » விளையாட்டு » பெண்கள் உலக குத்துச்சண்டை: சாதிப்பாரா மேரிகோம்?

பெண்கள் உலக குத்துச்சண்டை: சாதிப்பாரா மேரிகோம்?

புதுடெல்லி, நவ.15: 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனின் தொடக்கவிழா, நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. நட்சத்திர வீராங்கனை மேரிகோம் இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

இப்போட்டியில்,  72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்குபின்னர் தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் (48 கிலோ எடைப்பிரிவு) தலைமையில் களம் காணும் இந்திய அணியில் சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா மான், சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்கோஹைன், சவீத்தி பூரா, பாக்யபதி கச்சாரி, சீமா பூனியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் களமிறங்குவதால், இந்திய அணிக்கு சவால்கள் காத்திருக்கிறது. இதையும் தாண்டி, இந்தியாவிற்கு குறைந்தது 3 பதக்கங்கள் கிடைக்கும் என்பது, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் எதிர்பார்ப்பு.

மீண்டும் வாய்ப்பு 

5 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம், தற்போது, 6-வது முறையாக தங்கப்பதக்கத்தை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், எனது 48 கிலோ எடைப்பிரிவில் 2001-ம் ஆண்டில் இருந்து இன்னும் நிறைய வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள். அவர்களை பற்றி நான் நன்கு அறிவேன். அதே சமயம் இளம் வீராங்கனைகள் கடும் போட்டியாளராகவும், சாதுர்யமாகவும், வேகமாகவும் செயல்படுகிறார்கள். எனது அனுபவத்தை பயன்படுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*