Home » Flash News » கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் துவக்கம்

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் துவக்கம்

தூத்துக்குடி, நவ.8: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் இன்று தொடங்கியது.

முன்னதாக, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு யாக சாலைக்கு, வள்ளி, தெய்வானையுடன், சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார்.

7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது.மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர்சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று கோயிலை
சேர்கிறார்.6-ம் திருநாளான வருகிற 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் திருநாளான 14-ம் தேதி (புதன்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 8-ம் திருநாளான 15-ம் தேதி (வியாழக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டின பிரவேசம் நடைபெறும். 9-ம் திருநாளான 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 11-ம் திருநாளான 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

12-ம் திருநாளான 19-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோயில் சேர்கிறார்கள். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள். வந்த வண்ணம் உள்ளனர்.

விழா நாட்களில் விரதம் இருப்பதற்காக கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கம், மண்டபங்கள், விடுதிகளில் பக்தர்கள் தங்கி உள்ளனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோயில் வளாகத்தில் 9 இடங்களில் இரும்பு தகடாலான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் இரும்பு தகடாலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*