Home » Flash News » ஸ்டாலின்-நாயுடு சந்திப்பு

ஸ்டாலின்-நாயுடு சந்திப்பு

சென்னை,நவ.8:பிஜேபிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

அதே போன்று மா.கம்யூ கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் வரும் 13-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளது குறிப்பிடதக்கது.

மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். ராகுல் காந்தி கூறும்போது, “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பிஜேபியை தோற்கடிக்க வேண்டியது அவசியம்” என்றார். சந்திரபாபு நாயுடு கூறும் போது, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைமையில் கூட்டணியில் தொடர வேண்டும்’ என்றார்.

“தேசத்தைப் பாது காக்க இது ஜனநாயக நிர்பந்தம் என்று சந்திரபாபு நாயுடு கூறியதை ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திரபாபு நாயுடு நாளை சந்தித்து பேசவுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்புக்குப் பிறகு தேசிய அளவில் எதிர்க் கட்சிகளைக் கொண்ட பெரிய கூட்டணி அமைப்பதற்கான முன் முயற்சிகள் வேகமெடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிஜேபிக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக மா.கம்யூ கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகி யோரை சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சென்னையில் வரும் 13-ம் தேதி நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொள்கிறார்.

அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசுவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது திமுக கூட்டணியில் இடம் பெற்று அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதை மா.கம்யூ உறுதி செய்யும் என தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*