Home » Flash News » இலங்கையில் குழப்பமான சூழல்

இலங்கையில் குழப்பமான சூழல்

கொழும்பு, நவ.1: இலங்கை அரசியலில் நிலவி வரும் நெருக்கடியான சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா, வரும் திங்கட் கிழமை கூட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்ட தற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை கூட்டி யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்ய வேண்டும் என நெருக்குதல் கொடுத்ததையடுத்து, நாடாளுமன்ற முடக்கத்தை அதிபர் சிறிசேனா ரத்து செய்துள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து கடந்த வாரம் அவரை திடீரென நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக அதிபர் மைத்ரி பாலசிறிசேனா நியமித்தார். அத்துடன், நாடாளுமன்றத்தை நவம்பர் 14-ந் தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார். இந்த நடவடிக்கை இலங்கையில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்கே தான் இன்னமும் பிரதமராக நீடிப்பதாக கூறி கொழும்பில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார்.

ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, சிறிசேனாவுக்கு கடிதம் எழுதினார். ரணில் நீக்கப்பட்டது அரசியல் சாசன குழப்பத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள், நாடாளுமன்றத் திலேயே யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்ய வேண்டும் என சிறிசேனாவுக்கு நெருக்குதல் கொடுத்தன.ஐ.நா.வும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், சபாநாயகர் ஜெயசூர்யா, அதிபர் சிறிசேனாவை நேற்று சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக சிறிசேனா கூறியிருந்தார். இந்நிலையில், வரும் 5-ந் தேதி (திங்கட்கிழமை) இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக சிறிசேனா அறிவித்துள்ளார். யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே ஆகிய இருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.

தமிழ் கூட்டமைப்புக்கு 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் தங்களது நிலையை நாளை அறிவிப்பதாக கூறியுள்ளனர். இந்த 16 எம்பிக்களின் வாக்குகள் மிகவும் முக்கிய தேவை என்பதால், இரு அணிகளும் தங்களுக்கே வாக்களிக்க வேண்டுமெனகேட்டுக்கொண்டு உள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*