Home » Flash News » சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு

அகமதாபாத், அக்.31:‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது. சீனாவில் உள்ள புத்தர் சிலையை விட உயரமானது. ரூ.2989 கோடி செலவில் இந்த சிலை உரு வாக்கப்பட்டுள்ளது.

250 பொறியாளர்களும், 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அயராது உழைத்து இந்த சிலையை நிர்மாணித்து இருக்கிறார்கள். இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலைக்கு அருகே 193 மீட்டர் உயர பார்வையாளர் கோபுரமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்திலிருந்து சர்தார் சரோவர் அணையையும், நீர்த்தேக்கத் தையும், விந்திய மலை அழகையும் கண்டுகளிக்க முடியும்.
சிலையை பிரதமர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கின.

மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும் வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து சென்றன.பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன. விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-

இந்தியாவை உருவாக்கியவர், சர்தார் வல்லபாய் படேல். படேல் சிலையை திறந்து வைத்ததில் பெருமைப்படுகிறேன்.இந்தியர் அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.சிலை திறந்து வைத்ததை கவுரவமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*