Home » ஆசிரியர் பரிந்துரை » பட்டாசு வெடிக்க 2 மணி நேரமே அனுமதி: உச்சநீதிமன்றம்

பட்டாசு வெடிக்க 2 மணி நேரமே அனுமதி: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, அக்.30: தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

பட்டாசு வெடிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை அங்கு கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும்.

வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.

எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரம் மாற்றப்படும்; தமிழக அரசின் கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*