Home » உலகம் » இந்தோனேஷியா விமான விபத்தில் 189 பேர் பலி 24 உடல் பாகங்கள் மீட்பு

இந்தோனேஷியா விமான விபத்தில் 189 பேர் பலி 24 உடல் பாகங்கள் மீட்பு

ஜகார்த்தா, அக்.30: இந்தோனேஷியாவில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 189 பேரில் இதுவரை 24 பயணிகளின் சிதறிய உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் 132 பேரிடம் இருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணி நடைபெறும் என்றும், ஒவ்வொரு பையிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் உடல் பாகங்கள் வைக்கப்படுவதால், ஒவ்வொரு உடல் பாகத்தையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

லையன் ஏர் போயிங் விமானம் விழுந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்தின் வேகம் மற்றும் எடை காரணமாக, அது கடற்பரப்புக்குள் விழுந்த போதே, அழுத்தம் காரணமாக விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியிருக்கும் என்றும், அதில் இருந்தவர்களும் உடல் சிதறி உயிரிழந்திருக்கலாம் என்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்தோனேஷியாவின் தேடுதல் மற்றும் மீட்புக் குழு அமைப்பின் இயக்குநர் பம்பாங் சூர்யோ அஜி கூறியதாவது:லயன் ஏர் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்திலிருந்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம்.

நாங்கள் கண்டெடுத்த உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என்பதாலும், விமானம் கடலில் மூழ்கி நீண்ட நேரம் ஆகிவிட்டது என்பதாலும், அதிலிருந்த 189 பேரும் உயிரிழந்ததாகவே கருதுகிறோம்.

எனினும், விபத்துப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியிலிருந்து, அந்த விமானத்தில் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானத்தின் உடல் பகுதி கடலுக்குள் 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியில் 40 நீர்மூழ்கி வீரர்களும், சுமார் 150 மீட்புக் குழுவினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*