Home » தலையங்கம் » இலங்கையில் குழப்ப நிலை

இலங்கையில் குழப்ப நிலை

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ராஜபக்சேவும், அதிபர் சிறிசேனாவும் மீண்டும் கரம் கோர்த்துள்ளனர். அதே சமயம், இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பதாக சபாநாயகராக கரு ஜெயசூரியா கூறியிருக்கிறார். இதனால்,அங்கு உச்சக்கட்ட குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியல் சாசனப்படி பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. ஆனால், பிரதமரை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

நாடாளுமன்றத்தின் மூலமே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பிரதமரை நீக்க வேண்டும். அல்லது தானாக அவர் பதவி விலக வேண்டும். அதனால் தான் ராஜபக்சே நியமனம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என சபாநாயகர் கூறுகிறார். அரசியல் சாசனப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டவர் என்று தான் நம்பும் ஒருவரை பிரதமராக அதிபர் நியமிக்கலாம் என்ற ஷரத்தின் அடிப்படையிலேயே, குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி ராஜபக்சே தரப்பு ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏனெனில், நாடாளுமன்றத்தின் 225 இடங்களின் விக்ரமசிங்கே அணிக்கு 106 இடங்கள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும்  7 இடங்களே தேவை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று ரணில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ளார். இந்த நடவடிக்கை சரியானதல்லா என்று சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அதிபர் இந்த முடிவெடுத்துள்ளது சட்ட விரோதமென அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய சிறிசேனா தன்னைக் கொல்ல சதி நடந்ததாகவும், ரணில் அமைச்சரவையில் ஒருவர் இந்த சதிக்கு உடந்தை என்றும் குற்றம்
சாட்டியுள்ளார். மேலும் ஊழல், பொருளாதார சீர்கேடு காரணமாகவே ரணில் விக்ரமசிங்கே அரசைகலைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தே ஒரு அரசை கவிழ்க்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக, சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் முடிவெடுப்பது சந்தர்ப்பவாதமாகவே கருதப்படும். எனவே, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*