மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=37857
Export date: Wed Mar 20 9:41:30 2019 / +0000 GMT

கோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்


விசாகப்பட்டினம், அக். 25: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார். ஒரே நாளில் ஏராளமான சாதனைகளை படைத்த கோலியை கண்டு, கிரிக்கெட் உலகமே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில், களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி அசூர ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 ரன்கள் (129 பந்துகள்) எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்ததுடன், நேற்று ஒரேநாளில் மட்டும் ஏராளமான சாதனைகளை படைத்தார். அவர் 81 ரன்கள் எடுத்த போது, அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10,000 ரன்களை கடந்தது.

உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 13-வது வீரர் கோலி ஆவார். அத்துடன், 10,000 ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற புதிய சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார். தெண்டுல்கர் வசம் 17 ஆண்டுகளாக இருந்த இந்த சாதனையை கோலி தட்டிப்பறித்துள்ளார். ஒரு கேப்டனாக அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் அனைத்து இந்தியர்களையும் தாண்டி விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.

இதுபோக, கேப்டன் பொறுப்பில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குக்கு (22 சதம்) அடுத்த இடத்தில் கோலி (15 சதம்) இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக ஆடிய மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் கோலி சதம் கண்டுள்ளார். குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒரு வீரர் 'ஹாட்ரிக்' சதம் நொறுக்குவது இது 11-வது நிகழ்வாகும். விண்டீசுக்கு எதிராக கோலியின் 6-வது சதம் இதுவாகும்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் என்ற மகத்தான பெருமையும் கோலியின் வசம் ஆனது. ரன் குவிக்கும் எந்திரம் என்று வர்ணிக்கப்படும் டெல்லி சூறாவளி விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரையில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். ஒரு ஆண்டில் 5 மற்றும் அதற்கு மேல் சதங்கள் காண்பது இது 3-வது முறையாகும். இதன்மூலம், வேறு எந்த வீரரும் செய்யாத ஒரு சாதனையை விராட் கோலி படைத்துள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.
Post date: 2018-10-25 10:04:51
Post date GMT: 2018-10-25 10:04:51

Post modified date: 2018-10-25 10:04:51
Post modified date GMT: 2018-10-25 10:04:51

Export date: Wed Mar 20 9:41:30 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com