Home » தலையங்கம் » விராட் கோலியின் விரைவான சாதனை

விராட் கோலியின் விரைவான சாதனை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பத்தாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவனன் சச்சின் டெண்டுல்கர் கடந்த 16 ஆண்டுகளாக வைத்திருந்த இந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

சாதனைகள் என்பது முறியடிப்பதற்காகவே என்ற வகையில் எல்லா சாதனைகளும் ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களால் முறியடிக்கப்படுவது இயல்பாக நடக்கக்கூடியது. சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இன்னும் இருக்கிறார். அந்த சாதனைகளை எல்லாம் மற்ற வீரர்கள் முறியடிக்க முடியாமல் ஓய்வு பெற்ற நிலையில் விராட் கோலி என்ற நம்பிக்கை நட்சத்திரம் வெகு விரைவாக முன்னேறி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் பத்தாயிரம் ரன்களை 259 இன்னிங்சில் நடத்திக் காட்டிய இந்த சாதனையை 205 இன்னிங்சில் கோலி கடந்து இருக்கிறார். அதிலும் கடைசி ஆயிரம் ரன்களை வெறும் 11 இன்னிங்சில் கடந்து இருப்பது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் ஒரு சதத்துடன் இந்த சாதனை படைத்திருப்பது அற்புதமான தருணம் என்று முன்னாள் கிரிக்கெட் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் பாராட்டியுள்ளார்.

விராட் கோலியின் ஆக்ரோஷமும், நிலையாக ரன் குவித்து வரும் விதமும் வியப்பூட்டுவதாக கூறியுள்ள சச்சின் அவருக்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொண்டு தொடரட்டும் அவரது ரன் வேட்டை என்று வாழ்த்தியுள்ளார். 29 வயதான விராட் கோலி இதுவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் 37 சதங்களை அடித்துள்ளார். மூன்றாவது வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 29 சதங்களை அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த வரிசையில் கோலி 30 சதங்களை அடித்து அவரை முந்தியுள்ளார்.

கேப்டனாக அவர் 15 சதங்களை விளாசியுள்ளார். ரிக்கி பாண்டிங்குக்கு (22 சதங்கள்) அடுத்த இடத்தில் கோலி தற்போது இருக்கிறார். ஒரு போட்டியில் அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் சதம் அடிப்பது கோலிக்கு இது 7-வது முறையாகும். ராகுல் டிராவிட் 6 முறை இந்த சாதனையை படைத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனையை விராட் படைத்து வருகிறார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த நேற்றைய விறுவிறுப்பான ஆட்டம் டையில் முடிந்து இருப்பதும் ஒரு அசாத்திய நிகழ்வுதான்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*