Home » சென்னை » தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் 2வது நாள் முகாம்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் 2வது நாள் முகாம்

சென்னை, அக்.23: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று 2வது நாளாக குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் முகாமிட்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கூறியுள்ளனர்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஜூன் மாதம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அடுத்து வரும் நாட்களில் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரை குற்றாலத்திற்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பேரில் குற்றாலத்தில் உள்ள இசக்கி ரெஸ்டாரண்டில் இவர்கள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து 2017 ம் ஆண்டில் கூவத்தூரில் உள்ள ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் நேற்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் திருநெல்வேலிக்கு சென்றனர். அங்கிருந்து தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழாவையொட்டி நீராடிவிட்டு குற்றாலம் சென்றதாக கூறப்படுகிறது.

தகுதி நீக்க வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர்கள் குற்றாலம் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கூறுகையில், குற்றாலத்தில் நாங்கள் இரண்டு, மூன்று நாட்கள் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என தினகரன் கேட்டுக்கொண்டார்.

இதன்பேரில் விருப்பபட்டவர்கள் குற்றாலத்தில் தங்கி இருக்கிறார்கள் என்றார். இந்நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளதால் ஆட்சி கவிழ்ந்துவிடாது என கூறினார்.

மேலும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே சொல்லாததால் தான் ஸ்டாலின் குழம்பி போய் உள்ளார். திமுக – பிஜேபி இடையே மறைமுக தொடர்பு உள்ளது. நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அந்தந்த கட்சிக்கான வாக்கு வங்கி அப்படியே இருக்கும் என்று தெரிவித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் முகாமிடுவது குறித்து எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*