Home » Flash News » மர்ம காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

மர்ம காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

சென்னை,அக்.22:டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கும் மருந்துகள் தேவையான அளவுக்கு கைவசம் உள்ளது. தமிழகத்தில் டெங்குகாய்ச்சலுக்கு 5 பேரும், பன்றிகாய்ச்சலுக்கு 11 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் – கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோருக்கு கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கடும் காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து மருந்துகள் எடுத்து வந்தும், காய்ச்சல் குறையாததை அடுத்து 3 தினங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். அவர்களுக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று காலை குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலன்ன்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து, உரிய சிகிச்சை காலதாமதமின்றி வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

இதன்பின்னர் நிருபர்களுக்கு சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். பன்றிகாய்ச்சல் பாதிப்பால் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் குறைவாக உள்ளது. வீடு மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். காலி இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்குவால் கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீர் தேங்கினால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் சென்னையில் டெங்கு பாதித்து இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குழந்தைகள் மரணம் குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளன் கூறுகையில்,

உயிரிழந்த குழந்தைகள் இருவரும் 5 நாள் காய்ச்சலுக்குப் பின்னரே, மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது அபாயக் கட்டத்தில் இருந்ததால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*