Home » Flash News » 136 பயணிகளுடன் விமானம் சுவரில் மோதியது

136 பயணிகளுடன் விமானம் சுவரில் மோதியது

திருச்சி, அக்.12:திருச்சியிலிருந்து இன்று அதிகாலை துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுசுவரில் மோதியது. சேதம் அடைந்த நிலையில் விமானம் 4 மணிநேரம் பறந்து மும்பையில் தரை இறங்கியது. விமானத்தில் இருந்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.20 மணியளவில், 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்தின் டவர், சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. ஆனாலும் விமானம் மேலே பறந்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், விமானத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து எந்த தகவலும் தெரியாததால் பயணிகளின் உறவினர்கள் அச்சத்ததில் ஆழ்ந்தனர். எமெர்ஜென்சி லேண்டிங் இல்லாமல் 136 பயணிகளுடன் துபாய் சென்ற விமானம் குறித்த தகவல் தெரியாததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நீடித்தது.

இந்நிலையில், நடுவானில் 4 மணி நேரத்திற்கு மேலாக பறந்த விமானம், மும்பை விமான நிலையத்தில் இன்று 5.46 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தகவல் தெரிகிறது. இதையடுத்து பயணிகள் மற்றும் அவரது உறவினர்கள் நிம்மதியடைந்தனர்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு காரணம் இயந்திர கோளாறா, ஓடுதளத்தில் பிரச்னையா அல்லது விமானியின் கவனக்குறைவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமானநிலையத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே விமானத்தின் இரு சக்கரங்கள் சுற்றுசுவரில் மோதியதில் விமானத்தின அடிப்பாகம் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆண்டனா உள்ளிட்ட பல்வேறு பாகங்களும் நொறுங்கி கிழே விழுந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விபத்துக்குள்ளான விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தபட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானி விசாரணைக்காக அழைத்து செல்லபட்டனர்.

இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், விமானம் சுவரில் மோதிய பிறகும் பறப்பதற்கு ஏற்ற நிலையில் இருந்ததால் துபாய்க்கு திருப்பி விட்டோம் என்றார். விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில் பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். ஏர் இந்தியா பாதுகாப்பு குறித்து மூன்றாம் நபர் தொழில் அமைப்பு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.

பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து விமான போக்குவரத்தை வளர்ச்சியடைய செய்வதில் அர்த்தம் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விமான பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடபட்டிருக்கிறது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*