Home » குற்றம் » மனைவி படுகொலை: கணவன் தற்கொலை

மனைவி படுகொலை: கணவன் தற்கொலை

சென்னை, அக்.11:  பூந்தமல்லி அருகே மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நடந்து இருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடியில் திருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26) கூலித்தொழிலாளி. மனைவி துர்கா (வயது 23). இவர் பூந்தமல்லி நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 1 மாதத்திற்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு சுப்ரியா (வயது 3), சிவன்யா (வயது 2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். துர்காவின் பெற்றோர் இறந்து விட்டதால் அவரது பாட்டி மீராபாய் என்பவர் தான் துர்காவை வளர்த்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வெங்கடேசன் குழந்தைகள் இருவரையும் அதே பகுதியில் உள்ள பாட்டி மீராபாயின் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார். நேற்று இரவு குழந்தைகள் அழுததால் வெங்கடேசனிடம் குழந்தைகளை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு காலையில் வந்து அழைத்து செல்வதாக கூறியதாக தெரிகிறது. இன்று காலை மீராபாய் 2 குழந்தைகளையும் வெங்டேசன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

தட்டிப்பார்த்த போது திறக்க வில்லை. அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஜன்னலை திறந்து பார்த்தபோது வெங்கடேசன் தூக்கில் தொங்கிய நிலையிலும், துர்கா கட்டிலில் இறந்து கிடந்த நிலையிலும் இருந்துள்ளனர்.

இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெங்கடேசனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளதாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. நேற்று இரவும் வழக்கம் போல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தலையணையை துர்காவின் முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

துர்கா தற்கொலை செய்து கொண்டு அதைபார்த்த வெங்கடேசன் தான் தூக்கு போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுவிவரமும் தெரியவரும் என தெரிகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*