Home » குற்றம் » வேணு சீனிவாசனை கைது செய்ய தடை நீட்டிப்பு

வேணு சீனிவாசனை கைது செய்ய தடை நீட்டிப்பு

சென்னை, அக்.11: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணியில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், டி.வி.எஸ். நிறுவன தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புதுப்பித்தல் பணியில் முறைகேடு நடந்ததாகவும், சிலைகள் மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிலை தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதால் முன் ஜாமீன் வழங்க கேட்டு, டி.வி.எஸ். நிறுவனத்தின் உரிமையாளர் வேணு சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சானது, வேணு சீனிவாசனை கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இந்து அறநிலையத் துறையிடம் சில ஆவணங்களை கேட்டோம். ஆனால், அவைகளை தராமல் காலதாமதம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கில் இந்து அறநிலையத் துறையை சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 23 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை, மனுதாரர் வேணு சீனிவாசனை கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை நீட்டிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*