Home » Flash News » தித்லி புயல்: ஒடிசாவில் கடும் சேதம்

தித்லி புயல்: ஒடிசாவில் கடும் சேதம்

புவனேஸ்வர், அக்.11:தித்லி புயல் இன்று அதிகாலை ஒடிசாவின் கடற்கரை பகுதிகளை கடுமையாக தாக்கியது. 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏராளமான மரங்கள், மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் வீடுகளும் இடிந்துள்ளன.

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தித்திலி (இந்தியில் பட்டாம்பூச்சி) இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரத்தில் ஒடிசாவின் கடற்கரை நகரமான கோபால்பூர்-கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது.

அப்போது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வரை புயல் காற்று வீசியது. இதனால் கடற்கரை மாவட்டங்களான கஜபதி, கஞ்சம், பூரி, குர்தா, ஜெகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொள்ளுமாறு 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் முதலமைச்சர் நவின் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை ராணுவத்தின் உதவி கேட்கப்படவில்லை. இருப்பினும் விமானப்படை மற்றும் கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ஒடிசாவை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசாவில் பரவலாக மிக கனத்த மழை பெய்து வருகிறது.

ஆந்திரா மற்றும் ஒடிசா இடையிலான விமான , ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் புவனேஸ்வரிலிருந்து புறப்படும் 5 விமானங்கள் ரத்து செய்து விட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*