Home » Flash News » ‘அதிமுகவில் சசிகலா இல்லை’:ஓபிஎஸ், இபிஎஸ்

‘அதிமுகவில் சசிகலா இல்லை’:ஓபிஎஸ், இபிஎஸ்

சென்னை, அக்.11:அதிமுகவில் சசிகலா இப்போது இல்லை என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

அதிமுகவில்புதிய உறுப்பினர் அட்டைகளும், பழைய உறுப்பினர்களுக்கு புதுப்பித்தல் அட்டைகளும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முதல் அட்டையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்துக்கு அட்டையை வழங்கினார்.

இதை தொடர்ந்து அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா ஒன்றரை கோடி உறுப்பினர்களுடன் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாற்றினார். அவர்களது அடிச்சுவட்டில் வளர்ந்து வரும் இந்த கட்சி தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

மே மாதம் முடிய ஒரு கோடியே 10 லட்சத்த 41 ஆயிரத்து 600உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அதற்கு பின்னரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 90 நாட்களில் 60 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 1972-ம் ஆண்டு எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கினார். பல்வேறு இடையூறுகள் மற்றும் தொல்லைகளுக்கு இடையே கட்சியை வளர்த்தார்.

அவரது அடிச்சுவட்டில் ஜெயலலிதா, எம்ஜிஆர் கனவை நனவாக்க பல துன்ப துயரங்களை சந்தித்து கட்சியை வளர்த்தார். உயிருக்கு கூட ஆபத்துஏற்பட்ட போதிலும் கட்டுக்கோப்பாக இந்த இயக்கத்தை உருவாக்கி இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் செயல்பட்டார். உலக அளவிலும் அதிமுகவுக்கு பெரும் வரவேற்பை அவர் ஏற்படுத்தி கொடுத்தார். அவரது மறைவுக்கு பிறகு கட்சியை உடைக்க நடந்த சதிகளை முறியடித்து இந்த அளவுக்கு உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அனைவருக்கும் படிப்படியாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும்.

ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியில் தற்போது 1.10 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக கூறுகிறீர்கள். மிச்சம் 40 லட்சம் பேர் டிடிவி தினகரனுடன் தான்சென்று விட்டார்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படி யாரும் செல்லவில்லை. கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி கேட்டதற்கு, விரைவில் முறைப்படி அமைப்பு தேர்தல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நீக்கப்பட்ட உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் உள்ளார்களா என்ற கேள்விக்கு, சொற்ப எண்ணிக்கையிலேயே நீக்கப்பட்டுள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டது. மேலும் தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே அதை பற்றி பேச வேண்டியதில்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

சசிகலாவை கட்சியை விட்டு நீக்காத போது அவர் இன்னும் கட்சியில் நீடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள், பழைய உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க விண்ணப்பம் அளித்து புதுப்பித்துள்ளனர். அவர் தனது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க விண்ணப்பம் அளிக்கவில்லை. அதனால் சசிகலா இப்போது கட்சியில் இல்லை என்று அவர்கள் பதிலளித்தனர்.

அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தினகரனுடன் இருக்கிறார்களே என்று கேட்டதற்கு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*