w
Home » சினிமா » நான் தமிழ் பொண்ணுதான்: ஹன்சிகா

நான் தமிழ் பொண்ணுதான்: ஹன்சிகா

தமிழ் திரை உலகில் குட்டி குஷ்பு என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டு வந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. பஞ்சாபில் பிறந்து வளர்ந்தாலும் இந்தி, மலையாளம், தமிழ் என சுழன்று நடித்து குறுகிய காலத்தில் 50 படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார். தனது 50-வது படத்தின் சிறப்பு பற்றியும், எதிர்கால திட்டம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கே: 50 படங்கள் நடித்தது பற்றி….?
ப: எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. படங்களை நான் எப்போதும் கணக்கு வைத்து கொள்வது கிடையாது. ஒருநாள் இயக்குனர் ஜமீல் என்னை அணுகினார். எனக்காக ஒரு கதையை தயார் செய்துள்ளதாகவும், அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறினார். இது உங்களுக்கு 50-வது படம் என்று அவர் கூறிய பிறகு தான் எனக்கே தெரிந்தது. அந்த படம் மகா என்ற பெயரில் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

கே: உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த கேரக்டர் எது?
ப: எனக்கு அரண்மனை, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். அரண்மனை, அரண்மனை-2 படங்களில் என்னை சுற்றியே கதை நகரும். அதே போல் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க லஷ்மண் என்னை அணுகிய போது முதலில் மறுத்தேன். பிறகு அவர் என்னை சம்மதிக்க வைத்தார். முதல் பாதியில் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் நெகடீவ்வாகவும், 2-ம்பாதியில் சுட்டியாகவும் இருக்கும். எனவே இந்த படங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

கே: தற்போது நடித்து வரும் படங்கள் என்னென்ன?
ப: விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கிமுனை படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இது ஆக்ஷன் படம். எனக்கும், விக்ரம் பிரபுவுக்கும் இடையே அதிக காட்சிகள் உள்ளன. இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பராக மாறி உள்ளார். அதன்பிறகு அதர்வாவுடன் 100 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தின் கதையை பற்றி இப்போது சொல்ல முடியாது. சஸ்பென்ஸ்சாக இருக்க வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார்.

கே: எந்த மொழியில் நடிப்பது பிடிக்கும்?
ப: நான் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்திருந்தாலும், தமிழ் படங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். மலையாளத்தில் வில்லன் என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ளேன். அங்கு நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்தேன். இருப்பினும் தமிழ் படங்கள் என்னை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது. இங்கு எனக்கு ஒரு வசதியும், பாதுகாப்பும் உள்ளது. நான் தமிழ் பொண்ணுதான். எங்கள் வீட்டிலும் என்னை அடிக்கடி நீ தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டியவ என்று கூறுவார்கள். தமிழ் மக்கள் கொடுக்கும் அன்பு மிகவும் பெரிது.

கே: சமூகசேவையில் அதிகம் ஈடுபடுகிறீர்களே?
ப: நான் நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். தற்போது முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்காக மும்பை புறநகர் பகுதியில் கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறேன். இதற்காக என் ஊதியத்தில் ஒரு பகுதியை செலவிட்டு வருகிறேன். மேலும் என்னுடைய பொழுதுபோக்கு ஓவியம் வரைவது. இதுவரை நான் வரைந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியாக நடத்தி அதன் மூலம் வசூலாகும் பணத்தையும் இந்த கட்டிடத்திற்காக செலவிட உள்ளேன்.

கே:உங்களுக்கு அம்மா தான் அதிகம் பிடிக்குமா?
ப: நிச்சயமாக. எங்க அம்மா தான் என்னுடைய குரு, தெய்வம் எல்லாம். அவர் அம்மா மட்டுமல்ல, என்னுடைய தோழியும் கூட.எனக்கு எப்போதெல்லாம் மனக்கவலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதை போக்கும் மருந்தாக அவர் இருப்பார். என்னை இந்த அளவிற்கு நல்வழியில் கொண்டு சென்றுள்ளார்.

கே: எப்போது டும்… டும்…?
ப: அந்த சத்தம் என் காதுல கேட்கல…. இப்போதைக்கு திருமணத்திற்கு எந்த அவசரமும் இல்லை. எனக்கு 27 வயசுதான் ஆகிறது. சின்ன வயசிலேயே நடிக்க வந்துட்டேன். இப்போதைக்கு என் கவனம் எல்லாம் நடிப்பில் மட்டுமே.

கே:தமிழில் உங்களுக்கு நெருங்கிய தோழி யார்?
ப: தமிழ் சினிமாவில் எனக்கு எல்லோரும் நல்ல நண்பர்கள். இருப்பினும் நெருங்கிய தோழி ஸ்ரேயா ரெட்டி மட்டுமே.

கே: உடல் எடையை குறைத்தது ஏன்?
ப: பெரிய அளவில் எடையை குறைக்கவில்லை. இருப்பினும் 50-வது படமான மகா படத்திற்காக நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்காக எனது எடையை 3 கிலோ வரை குறைத்துள்ளேன். இருப்பினும் எனது முக அழகில் எந்த மாற்றமும் இல்லை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*