Home » Flash News » விராட் கோலிக்கு விருது அறிவிப்பில் சர்ச்சை

விராட் கோலிக்கு விருது அறிவிப்பில் சர்ச்சை

புதுடெல்லி, செப்.21:கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, பயிற்சியாளர்களுக்கு துரோணர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு வழங்கப் படுகிறது. தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஹிமா தாஸ், ஜின்சன் ஜான்சன் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருதுகளும், 8 பேருக்கு துரோணாசாரியார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு விருதுகள் வரும் 25-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுகளுக்கு பரிந்துரை செய் வதற்காக அமைக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழுவின் பரிந்துரை புள்ளிகளில், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினிஸ் போகத் ஆகியோர் 80 புள்ளிகளை பெற்று இருந்தனர். மீராபாய் சானுவுக்கு 44 புள்ளிகள் கிடைத்தன. விராட் கோலியின் ஸ்கோர் வெறும் 0 ஆகும். ஆனால் 80 புள்ளிகளை பெற்றவர்கள் நிராகரிக்கப்பட்டு, புள்ளியே பெறாத கோலியும், 44 புள்ளிகளை பெற்ற மீராபாயும் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக் வகை விளையாட்டை சேராததால் அதற்கு புள்ளிக் கணக்கு பொருந்தாது என கூறப்படுகிறது. தேர்வுக்குழுவின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த புனியா, இது பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜீய வர்தன் சிங் ரத்தோரிடம் பேசப்போவதாக கூறியுள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமென்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வென்றவர் புனியா என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்படும்போதெல்லாம் இந்த சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஆகியோருக்கு பின்னர் கேல் ரத்னா விருது பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*