This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Sun Sep 23 21:44:55 2018 / +0000 GMT

வேலுமணி சவாலை திமுக ஏற்க வேண்டும்:டி.ஜெயக்குமார்


சென்னை, செப். 12:ஊழல் புகார்கள் தொடர்பாக அமைச்சர் வேலுமணி விடுத்துள்ள சவாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வரும் 30-ந் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு இன்று காலை கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பிறகு அமைச்சர் டி.ஜெயக் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும். எல்லா சாலைகளும் ரோம் நோக்கி
செல்கின்றன என்பதுபோல் எல்லாசாலைகளும் நந்தனம் ஒய்எம்சிஏ திடல் நோக்கி செல்கின்றன என்ற அளவுக்கு இந்த விழாவுக்கு மக்கள் வருவார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அமைச்சர் வேலுமணி மீது திமுக புகார் கூறியுள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக வேலுமணி அளித்துள்ள பேட்டியில் தன் மீதான புகார்களை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்று கூறியுள்ளார். நிரூபிக்கவில்லை என்றால் திமுக தலைவர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலக தயாரா? என்றும் அவர் கேட்டுள்ளார். வேலுமணி விடுத்துள்ள இந்த
சவாலை திமுக ஏற்க வேண்டும் என்றார்.

அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்று கேட்டதற்கு, மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறுகிறார்கள். தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பிறகு யாருடன் கூட்டணி என்று சொல்கிறோம். அரசியலில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் புதிய கூட்டணிகள் உருவாகும் என்றார்.
இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், அமைச்சர் வேலுமணி தன் மீதான புகார் பொய் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. எங்கள் புகாருக்கு ஆதாரங்கள் உள்ளன என்றார்.
Post date: 2018-09-12 11:13:31
Post date GMT: 2018-09-12 11:13:31
Post modified date: 2018-09-12 11:13:31
Post modified date GMT: 2018-09-12 11:13:31
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com