w
Home » சினிமா » ரசிகர்கள் வீட்டு பிள்ளை சீமராஜா சிவகார்த்திகேயன் சிறப்பு பேட்டி

ரசிகர்கள் வீட்டு பிள்ளை சீமராஜா சிவகார்த்திகேயன் சிறப்பு பேட்டி

ரஜினி, விஜய்க்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களுக்கு பிறகு பொன்ராமுடன் 3-வது முறையாக கூட்டணி அமைத்து சீமராஜா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது. இந்நிலையில் படம் பற்றியும், தனக்கு இந்த இடம் கிடைத்தது எப்படி என்பது குறித்து சிவகார்த்திகேயன் மாலைச்சுடர் பத்திரிகைக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

கேள்வி:- சீமராஜா அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளதா?
பதில்:- எங்கள் கூட்டணியில் வெளிவந்த வருத்தப்படதா வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை விட இதற்கு பட்ஜெட் அதிகம் தான். ஆனால் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. படத்திற்கு தேவை என்பதால் செய்துள்ளோம்.

கே:- பிளாஷ்பேக் காட்சிக்கு இவ்வளவு செலவு தேவையா?
ப:- அப்படியில்லை. ஒரு கோட்டை போன்ற அமைப்புகள் இப்போதில்லை. அப்படியே உள்ள இடங்களில் அனுமதி கிடைப்பது கடினமான ஒன்று. எனவே கோட்டை போன்ற செட், கிராபிக்ஸ் பணிகள் போன்றவற்றால் பட்ஜெட் அதிகமானது. படத்தை பார்க்கும் போது இது வீண் செலவு என சொல்ல மாட்டீர்கள்.

கே:- படத்தில் எத்தனை கெட்டப்புகள்?
ப:- 2 கெட்டப்புகளில் நடித்துள்ளேன். இளவரசன் கதாபாத்திரம் ஒன்றும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். இரண்டுக்குமான வேறுபாட்டை முடிந்தவரை செய்துள்ளேன்.

கே:- மற்ற கதாபாத்திரங்களை பற்றி சொல்லுங்கள்?
ப:- 5 கதாபாத்திரங்களை சுற்றிய கதை. நெப்போலியன் ராஜாவாக நடித்துள்ளார். நான் இளவரசன். சிம்ரன் காளீஸ்வரி கதாபாத்திரத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கன்னிங்காக நடித்துள்ளார். லால் வில்லன் கதாபாத்திரத்தில் சூரி காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

கே:- கதாநாயகிக்கு என்ன ரோல்?
ப:- சமந்தா கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்தார். தன்னுடைய கதாபாத்திரம் சிலம்பம் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் ஓகே சொன்னார். அவர் டீச்சராக நடித்துள்ளார்.

கே:- தமிழ் மன்னன் பற்றிய கதையா?
ப:- சிங்கம்பட்டி ஜமின் பற்றிய கதைதான். இன்னமும் அந்த ஊரில் 80 வயதான ஜமின்தார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அதை மையமாக வைத்துக்கொண்டு இந்த கதையை பொன்ராம் எடுத்துள்ளார். இதில் மண்சார்ந்த போராட்டங்களும் இருக்கும்.

கே:- பிளாஷ்பேக்கில் சண்டை காட்சிகள் உண்டா?
ப:- சண்டை காட்சிகள் உள்ளது. ஆனால் ரத்தம் சொட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெறாது. குழந்தைகளை பயமுறுத்தாத வகையில் அவர்கள் ரசிக்கும் பேண்டஸி படமாகவே இருக்கும். பாகுபலி எப்படி குழந்தைகளை கவர்ந்ததோ அதேபோல் சீமராஜா படமும் இருக்கும்.

கே:- பொன்ராம், சிவா கூட்டணி என்றால் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறதே?
ப:- படத்தை எடுக்கும்போது பிரஷர் இல்லை. ஆனால் வெளியிடும் போது எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. முந்தைய சாதனைகளை தாண்டி இந்த படம் சாதிக்க வேண்டும் என முனைப்புடன் அனைவரும் பணியாற்றி உள்ளோம்.

கே:- சிவகார்த்திகேயன் படங்களுக்கு என தனி மார்க்கெட் உள்ளதே?
ப:- இதுவரை என்னுடைய படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை. இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் வெற்றி பெறும் என்று நினைத்து நடிப்பதால் படங்கள் வெற்றியடைகின்றன. இதனால் விநியோகஸ்தர்களும் நம்பி வருகின்றனர்.

கே:- சிவாவின் வெற்றி பார்முலா என்ன?
ப:- ஒரு தியேட்டரில் 400 பேர் ரசித்தால் அது வெற்றி படம். 600 பேர் ரசித்தால் பாக்ஸ்ஆபீஸ்ஹிட். 800 பேர் ரசித்தால் அது பிளாக் பஸ்டர். எனவே மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை சரியாக கணித்துவிட்டால் படம் வெற்றியாகி விடும். மக்களுக்கு பிடித்ததை கொடுக்க நல்ல கூட்டணியை அமைக்கிறோம். அந்த கூட்டணியுடன் இணைந்து படம் எடுப்பதால் வெற்றி பெறுகிறது.

கே:- அடுத்த படங்கள் என்னென்ன?
ப:- அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் முழுநீள காமெடி படத்தில் நடித்து வருகிறேன். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் சதீஷ், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் மற்றும் ராதிகா ஆகியோர் நடிக்கின்றனர். ஹிப்ஆப் ஆதி இசையமைக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதனை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் படத்தில் நடித்து வருகிறேன். இது புதுவித முயற்சி. எனக்கும் இந்த படம் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். இதில் ரகுல்ப்ரீத்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 2 படங்களின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கே:- இந்த இடத்தை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
ப:- நிச்சயமாக இல்லை. சினிமாவில் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் மக்கள் என்னை அவர்கள் வீட்டு பிள்ளையாக அங்கீகரித்து என்னுடைய வெற்றி அவர்களுடைய வெற்றியாக நினைக்கின்றனர். இந்த அன்பும் அரவணைப்பும் தான் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

கே:- மகளுடன் பாடிய அனுபவம் எப்படி?
ப:- கனா படத்திற்காக இயக்குனர் அருண் ராஜா அப்பா மகள் சம்மந்தப்பட்ட பாடல் உள்ளது. அதை நீங்களும் உங்கள் மகளும் பாடவேண்டும் என சொன்னார். நாங்களும் முயற்சி செய்து பாடினேன். அந்த பாடல் யூ டியூபில் 25 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர். இது என் மகளுக்கு புரியவில்லை. இருந்தாலும் அவளுக்கு தோழிகளும், ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கே:- தயாரிப்பாளராக மாறியது எப்படி?
ப:- நல்ல கதைகள் கிடைக்கும் போது கூடவே உள்ள நண்பர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என எண்ணத்தில் நண்பன் அருண்ராஜாவுக்கு கனா படத்தை இயக்க சொன்னேன். இதுவரை வந்திராத சப்ஜெக்ட் ஒரு விவாசாயி மகள் கிரிக்கெட் வீரராகும் கதை. தொடர்ந்து இது போன்ற கதைகளை தயாரிப்பேன். அந்த பணிகளை என்னுடைய நண்பர்களை வைத்து செயல்படுத்தி வருகிறேன். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*