மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35616
Export date: Tue Mar 19 1:38:56 2019 / +0000 GMT

குட்கா குடோனில் மாதவராவிடம் விசாரணை


சென்னை, செப்.12:குட்கா ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதவராவை இன்று செங்குன்றம் குடோன்களுக்கு அழைத்துச்சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

டைரியில் எழுதியபடி லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மையா என்பது உள்ளிட்ட பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனைக்குப் பிறகு குட்கா ஆலை உரிமையாளர் சீனிவாசராவ், அவரது பங்குதாரர்கள் ஸ்ரீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார், கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டி ருந்த இவரை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து இவர்கள் 5 பேரையும் ஒன்றாக அமர வைத்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட மாதவராவின் டைரியில் எழுதியுள்ள படி பணம் கொடுக்கப்பட்டது உண்மையா? யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை கேட்டனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கவும், குட்கா ஆலைக்கான உரிமத்தை புதுப்பிக்கவும் லஞ்சம் பெறப்பட்டதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி யிடமும், பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய யார்? யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

3-வது நாள் காவல் தினமான இன்று மாதவராவை செங்குன்றம் அருகே உள்ள 2 குடோன்களுக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்த குடோன்கள் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டவை ஆகும். இந்த குடோன்களுக்குள் மாதவராவை அழைத்துச்சென்று எங்கெங்கு குட்கா மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன, எந்தெந்த மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் குட்கா அனுப்பப்பட்டது. வாகனங்கள் மூலம் அனுப்பபட்டதா? அல்லது நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டதா? என்பது தொடர்பான கேள்விகளை கேட்டனர்.

இந்த விசாரணையில் முக்கிய தடயங்கள் கிடைத்ததாக சிபிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை 5 நாள் காவல் முடிவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் அடுத்து வரும் நாட்களில் விசா ரணை மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post date: 2018-09-12 09:46:59
Post date GMT: 2018-09-12 09:46:59

Post modified date: 2018-09-12 09:46:59
Post modified date GMT: 2018-09-12 09:46:59

Export date: Tue Mar 19 1:38:56 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com