மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35613
Export date: Fri Sep 21 19:12:41 2018 / +0000 GMT

பட்டாசுகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழப்பு


ஈரோடு, செப்.12:ஈரோட்டில் தீபாவளி விற்பனைக் காக கொண்டு வரப்பட்ட பட்டாசு கள் வெடித்துச் சிதறியதில் கடை உரிமையாளரின் மகன், கூலித் தொழிலாளி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்த சுகுமார் என்பவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை வாங்கிய இவர், சாஸ்திரி நகரில் தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் பாதுகாப்பாக வைப்பதற்காக, லோடு ஆட்டோவில் கொண்டுசென்றுள்ளார்.

அவருடன் கல்லூரியில் படிக்கும் மகன் கார்த்திக்கும்சென்றுள்ளார். அதிகாலையில் பட்டாசுகளை ஆட்டோவில் இருந்து கூலித்தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சுகுமார் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் இறக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, பட்டாசு மூட்டை ஒன்று கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த பண்டலில் வெங்காய வெடிகள் இருந்ததால், தரையில் விழுந்த வேகத்தில், அவை வெடித்துச் சிதறியதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற பட்டாசுகளும் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் பட்டாசுகள் ஏற்றி வந்த ஆட்டோவும், அருகில் நின்றிருந்த மற்றொரு ஆட்டோவும் வெடித்து சிதறியது. இதன் தாக்கத்தில் பட்டாசு குடோனாக பயன்படுத்தப்பட்ட வீடும் இடிந்தது. அத்துடன் அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்தன.

இந்த விபத்தில், கடை உரிமையாளர் சுகுமாரின் மகன் கார்த்திக், கூலித் தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதும் மளிகைக்கடை உரிமையாளர் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினரும், போலீசாரும் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து நடந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் வைக்கப்பட்டதாக கூறிய போலீசார், தப்பியோடிய சுகுமாரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வெடி விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறினார்.
Post date: 2018-09-12 09:32:04
Post date GMT: 2018-09-12 09:32:04

Post modified date: 2018-09-12 09:32:04
Post modified date GMT: 2018-09-12 09:32:04

Export date: Fri Sep 21 19:12:41 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com